ஆனந்தரங்கப் பிள்ளை

இன்று (மார்ச் 30-ந்தேதி) “நாட்குறிப்பு வேந்தர்” ஆனந்தரங்கப் பிள்ளையின் பிறந்த நாள்.புதுச்சேரி மாநிலம் பிரெஞ்சியர் ஆட்சியில் இருந்தபோது பிரான்ஸ் நாட்டின் சார்பில் புதுச்சேரியை ஆண்ட கவர்னர்களில் குறிப்பிடத் தக்கவர் துய்ப்ளெக்சு ஆவார். அவரின் ஆட்சிக்காலத்தில் அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாகி அவருடைய எல்லா அரசியல் நடவடிக்கைகளிலும் அவருக்கு உறுதுணையாக விளங்கியவர் ஆனந்த ரங்கப் பிள்ளை ஆவார். 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த ரங்கப்பிள்ளை கவர்னர் துய்ப்ளெக்சின் தலைமைத் துவிபாசியாகப் (மொழிபெயர்ப்பாளர்) பணியாற்றியவர். அக்காலத்தில் தென்னிந்தியாவை ஆண்ட பல மன்னர்களோடு தொடர்பு வைத்திருந்தவர். பிரெஞ்சிந்திய ஆட்சிக் காலத்தின் 18-ம் நூற்றாண்டின் நிலையைத் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் இவர் எழுதிய “ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு” என்பது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதப்பட்ட இவரின் நாட்குறிப்பு புதுச்சேரி மாநிலத்தின் அரசியல், சமூகம், பண்பாடு சமயசூழல் முதலானவற்றை வெளிப்படுத்துகிறது.1709-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதி சென்னை பெரம்பூரில் ஆனந்தரங்கர் பிறந்தார். புதுச்சேரியில் தரகராய் இருந்த ஆனந்தரங்கரின் தாய்மாமன் நைனியப்பப் பிள்ளை ஆனந்தரங்கரின் தந்தையாராகிய திருவேங்கடம் பிள்ளையைப் புதுச்சேரிக்கு வரவழைத்தார். அவர்தன் மகன் ஆனந்தரங்கரோடு புதுச்சேரி வந்தார். 1726-ம் ஆண்டில் திருவேங்கடம்பிள்ளை புதுச்சேரியில் இறந்த போது ஆனந்த ரங்கருக்கு வயது 17 ஆகும். புதுச்சேரியில் ஆனந்தரங்கர் துவிபாசி ஆவதற்கான சூழல்கள் பெருகின. தன்னுடைய அறிவால் பிரெஞ்சு கவர்னர்களின் கவனத்தை ஈர்த்தார். பிரெஞ்சு கவர்னர்களுக்குத் துவிபாசியாகப் பணியாற்றிய கனகராய முதலியார் இறந்தபின்பு ஆனந்தரங்கர் 12-2-1746 முதல் துய்ப்ளெக்சின் துவிபாசியாகப் பணியாற்றத் தொடங்கினார். ஆனால் அவர் முறைப்படி 1748 -ம் ஆண்டு ஜூலை மாதம்தான் அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.தலைசிறந்த வணிகராகத் திகழ்ந்த ஆனந்தரங்கர் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,சமஸ்கிருதம் போர்த்துகீசியம் முதலான மொழிகளை நன்கு அறிந்தவர். கணக்கு, கடிதம், ரசீது, விண்ணப்பம், பத்திரம், முதலான எல்லாவற்றையும் நகலெடுத்துப் பத்திரமாகப் பாதுகாத்து வைக்கும் வழக்கத்தை இவர் மேற்கொண்டிருந்தார். நவாப்புகளிடமிருந்து வரும் பார்சிக் கடிதங்களையும் பிறரிடமிருந்து வரும் பிரெஞ்சு, தெலுங்கு, தமிழ் முதலான கடிதங்களையும் படியெடுத்து வைப்பது இவரது வழக்கமாகும். இச்சிறந்த பண்பு நலன்தான் ஆனந்தரங்கரை லெனுவார், துய்மா மற்றும் துய்ப்ளெக்சு ஆகிய பிரெஞ்சு கவர்னர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக ஆக்கியது. அரசியல் சாணக்கியராக விளங்கிய ஆனந்தரங்கர் பிரெஞ்சு கவர்னர்களுக்குத் தெரியாமல் அன்றாடம் புதுச்சேரியில் அவர் காலத்தில் நடைபெற்ற அரசியல் உள்ளிட்ட அனைத்து நிகழச்சிகளையும் டைரியில் எழுதி பதிவு செய்தார் . இதுவே ஆனந்தரங்கரின் நாட்குறிப்பாகும். இந்த நாட்குறிப்பே புதுச்சேரி மாநில வரலாற்றில் 18-ம் நூற்றாண்டின் புதுச்சேரியின் வரலாற்றைத் தெளிவாக விளக்கும் காலக் கண்ணாடியாக விளங்குகிறது.

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இன் படமாக இருக்கக்கூடும்
ஆனந்தரங்கப் பிள்ளை

Leave a Reply

%d bloggers like this: